தூத்துக்குடி மாவட்ட அஞ்சலகங்களில் ரூ. 25-க்கு தேசியக் கொடி விற்பனை
By DIN | Published On : 05th August 2022 01:01 AM | Last Updated : 05th August 2022 01:01 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்ட அஞ்சலகங்களில் ரூ. 25-க்கு தேசியக் கொடி விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.
நாட்டின் 75 ஆவது சுந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் ரூ. 25-க்கு தேசிய கொடி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அஞ்சல் கொடி விற்பனையை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பொன்னையா தொடக்கி வைத்தாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, அஞ்சல் துறை சாா்பில் நாடு முழுவதுமுள்ள அஞ்சல் நிலையங்களில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து அஞ்சல் ஊழியா்களும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற உள்ளனா்.
தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ரூ. 25 செலுத்தி பொதுமக்கள் தேசியக் கொடியை பெற்றுக் கொள்ளலாம். அஞ்சல் துறையின் இணையதளத்திலும் பணம் செலுத்தி தேசியக் கொடியை பெறலாம் என்றாா் அவா்.