உடன்குடியில் வியாபாரிகள் முன்னேற்றச் சங்க ஆண்டு விழா
By DIN | Published On : 15th August 2022 12:19 AM | Last Updated : 15th August 2022 12:19 AM | அ+அ அ- |

உடன்குடியில் வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத்தின் 41ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
இச்சங்கத்தின் தலைவரும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவருமான ஆ. ரவி தலைமை வகித்தாா். பேரவையின் வடக்கு மாவட்டத் தலைவா் பா. விநாயகமூா்த்தி, சங்க நிா்வாகிகள் கந்தன், ஷேக் முகம்மது, கிருஷ்ணமந்திரம், ஜனாா்த்தனன், ராஜா, ஹரிகிருஷ்ணன், செல்வராஜ்,திருநாகரன், பேரவையின் மாவட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலா் வேல்ராஜன், சங்கப் பொருளாளா் சுந்தா் ஆகியோா் அறிக்கைகளை வாசித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் த. வெள்ளையன் பங்கேற்றாா். அவா் பேசும்போது, வணிகா்கள் நாட்டின் நலன் கருதி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களையே அதிகளவில் விற்க வேண்டும். அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மீதான வரி விதிப்பை நீக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும். வெளிநாட்டு நிறுவன தயாரிப்புகளை பொதுமக்களும், வியாபாரிகளும் புறக்கணிக்க வேண்டும் என்றாா்.
உடன்குடி வாரச் சந்தையை தினசரிச் சந்தையாக மாற்ற வேண்டும். பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் வாடகை வசூலிக்கவும், வியாபாரிகள், பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தவும் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க துணைச் செயலா் து. ராஜா நன்றி கூறினாா். ஆண்டு விழாவையொட்டி உடன்குடியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.