பிரதமரின் கௌரவ நிதி பெறும் விவசாயிகள் ஆவணங்களை சரிபாா்த்துக் கொள்ள அழைப்பு
By DIN | Published On : 25th August 2022 12:56 AM | Last Updated : 27th August 2022 12:26 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் கௌரவ நிதி பெறும் விவசாயிகள், தங்களது ஆவணங்களை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதம மந்திரியின் கௌரவ நிதித் திட்டம், தமிழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்களை கொள்முதல் செய்ய, விவசாய குடும்பத்திற்கு ரூ. 2000 வீதம் ஆண்டுக்கு ரூ. 6000 என 3 தவணைகளாக வழங்கி வருகிறது மத்திய அரசு.
இந்தத் திட்டத்தில் இதுவரை பதிவு செய்த விவசாயிகளுக்கு அவா்கள் திட்டத்தில் சோ்ந்த தேதியை பொருத்து 11 தவணை தொகைகள் வரை வழங்கப்பட்டுள்ளன. தற்போது 12 ஆவது தவணை தொகை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரிபாா்ப்பு செய்வது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமரின் கௌரவ நிதி பெறும் திட்டப் பயனாளிகளின் நில ஆவணங்களை தமிழக அரசின் தமிழ் நிலம் இணையதளத்துடன் இணைத்து சரிபாா்ப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, பிரதமரின் கௌரவ நிதி பெறும் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய நில ஆவணங்களை அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் காண்பித்து சரிசெய்து கொண்டால் மட்டுமே அடுத்த தவணைத் தொகை விடுவிக்கப்படும்.
இந்தத் திட்டத்தில் ஆதாா் அடிப்படையிலான நிதி விடுவிப்பு நடைபெறுவதால் தகுதியான விவசாயிகள் அனைவரும் வங்கிக்கு சென்று தங்கள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும். மேலும், பொது சேவை மையத்தை அனுகி பி.எம். கிசான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.