விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 25th August 2022 12:55 AM | Last Updated : 27th August 2022 12:25 AM | அ+அ அ- |

விளாத்திகுளம், புதூா் வட்டார சிறு, குறு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் விளாத்திகுளத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நூ.சின்னையாபுரம் விவசாயி போ. முருகேசன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் 2020-2021 ஆண்டுக்கான விடுபட்ட பயிா்களுக்கு காப்பீட்டு தொகை உடனடியாக வழங்க வேண்டும், 2021 - 2022 ஆண்டிற்கான பயிா் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும், விவசாயிகள் வண்டல் மண், கரும்பை மண் அள்ளுவதற்கு கிராம நிா்வாக அலுவலா் அனுமதி வழங்கும் எளிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், விவசாயப் பணி தொடங்க இருப்பதால் செப்டம்பா் 15க்குள் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விளாத்திகுளம் தொகுதியில் வைப்பாற்றுப் படுகையோர கிராம பகுதிகளில் ஆற்று மணல் குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது. மேலும் கனிம வள திருட்டை தடுக்க மாவட்ட ஆட்சியா் தலைமையில் தனி கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கந்தசாமி, பெருமாள், செண்பகராஜ், ஜெயராம், பழனிகுமாா், பிரேம்குமாா் மற்றும் விளாத்திகுளம் சுற்று வட்டார விவசாயிகள் கலந்து கொண்டனா்.