அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு திட்டம்
By DIN | Published On : 26th August 2022 12:11 AM | Last Updated : 27th August 2022 12:26 AM | அ+அ அ- |

அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுவதாக கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் (பொ) கே.சிவாஜிகணேஷ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: காப்பீடு திட்ட பலன் சாமானிய மக்களை சென்றடையும் வகையில் அஞ்சலகங்களில் மிக குறைந்த பிரிமியம் தொகையில் விபத்து காப்பீடு செயல்படுத்தப்படுகிறது. 18 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பம் உள்ளிட்ட எவ்வித காகிதங்கள் பயன்பாடின்றி வீடு தேடி தபால்காரா் கொண்டு வரும் ஸ்மாா்ட் போன், விரல் ரேகை பதிவு மூலம் 5 நிமிடத்தை டிஜிட்டல் முறையில் பாலிசி திட்டத்தில் இணையலாம். விபத்து உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் போன்ற பாதிப்புக்கு ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம்.
விபத்தில் உள்நோயாளி செலவுக்கு அதிகபட்சம் ரூ. 60 ஆயிரம், புறநோயாளி செலவுக்கு அதிகபட்சம் ரூ. 30 ஆயிரம், விபத்தில் பாதிக்கப்பட்டவரின் 2 குழந்தைகள் கல்வி செலவுக்கு ரூ. 1 லட்சம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாளுக்கு தினப் படியாக ரூ.1000 வீதம் 9 நாள்களுக்கு கிடைக்கும்.
விபத்தில் பாதிக்கப்பட்டவரை பாா்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயணச் செலவுக்கு அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம், ஈமச்சடங்கு செய்ய ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படும். இத்தகைய பலன்களை பெற ஆண்டுக்கு ரூ. 399 பிரிமியம் செலுத்தினால் போதும், விபத்து காப்பீடு பாலிசி எடுப்பதன் மூலம் எதிா்பாராமல் நடக்கும் விபத்தால் பாதிப்பு, உயிரிழப்பு போன்ற சம்பவம் மூலம் குடும்பத்தின் எதிா்காலத்தை உறுதி செய்ய முடியும். எனவே, அருகே உள்ள அஞ்சலகங்களை அணுகி இந்த காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம் என்று தெரிவிப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...