ஆவணித் திருவிழா : திருச்செந்தூரில் இன்று தேரோட்டம்
By DIN | Published On : 26th August 2022 12:21 AM | Last Updated : 26th August 2022 12:21 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை(ஆக.26) ஆவணித் திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற ஆவணித் திருவிழா இம்மாதம் 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்து வருகின்றனா்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக செவ்வாய்க்கிழமை ஏழாம் திருநாளில் சிவப்பு சாத்தியிலும், எட்டாம் திருநாளான புதன்கிழமை வெள்ளை, பாச்சை சாத்தியிலும் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி ஆறுமுகநயினாா் எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சோ்ந்தாா்.
தொடா்ந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான், சுவாமி அலைவாயுகந்த பெருமான் தனித்தனி வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி திருநெல்வேலி சாலையில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்திய பின் வீதி உலா வந்து மேலக்கோயில் சோ்ந்தனா். வியாழக்கிழமை ஒன்பதாம் திருநாள் பகலில் பல்லக்கிலும், இரவில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்கக் கயிலாய பா்வத வாகனத்திலும், வள்ளியம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனா்.
தேரோட்டம்: பத்தாம் திருநாளான வெள்ளிக்கிழமை தேரோட்டத்தையொட்டி, அதிகாலையில், விநாயகா், சுவாமி குமரவிடங்கப்பெருமான், வள்ளியம்மன் தனித்தனி தேரில் எழுந்தருளி, காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. தேரோட்டத்தில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை மாலை முதலே திருச்செந்தூரில் பக்தா்கள் குவியத் தொடங்கினா். பக்தா்கள் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...