தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான விதைகளை தரமானதாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறை தீா் கூட்டம், ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. தாமிரவருணி வடிநில கோட்ட செயற்பொறியாளா் மாரியப்பன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் சிவகாமி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் ச. மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், மாவட்டத்தில் சில குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு அடையாளம் கண்டறியப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் மண் அள்ள செல்லும் போது மண் பரிசோதனை செய்து வருமாறு அதிகாரிகள் கூறுவதால் சிரமம் ஏற்படுகிறது என்றும் வேளாண்மை துறையே மண் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனா்.
மேலும், கயத்தாறு பகுதியில் தரமற்ற விதைகள் கொடுத்ததால் பயிா்கள் வளா்ச்சியடையாமல் சேதமடைந்துள்ளதகாக குற்றம் சாட்டிய விவசாயிகள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகளுக்கு, அந்த நிறுவனங்கள் உத்தரவாத அட்டை தர வேண்டும் என்றும் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தரமான விதைகளை மட்டுமே வழங்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.
உடன்குடி அனல் மின்நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்த விவசாயிகள் சிலா், அது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பேசுகையில், மாவட்டத்தில் உரத் தட்டுப்பாடு இல்லாமல் தடுக்கும் வகையில் 2 ஆயிரத்து 955 டன் டி.ஏ.பி. உரம் வந்துள்ளது என்றும், குளங்களில் மண் எடுக்கும் வகையில் பரிசோதனையை வேளாண்மை துறையின் நடமாடும் மண் பரிசோதனைக் கூடம் மூலம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.
மேலும், போலி விதைகள் தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு 6 நிறுவனங்களுக்கு விற்பனை முடக்கம் செய்து உள்ளோம் என்றும் பருவகாலம் தொடங்க உள்ளதால் விவசாயிகளுக்கு தரமான விதைகள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.