ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கு: பெண் உள்பட 3 போ் கைது
By DIN | Published On : 11th December 2022 06:04 AM | Last Updated : 11th December 2022 06:04 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் பெண் மற்றும் அவரது இரு மகன்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டியை அருகே உள்ள ஆலம்பட்டி ஊருணியிலிருந்து ஆண் சடலத்தை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா். பின்னா் விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவா் கயத்தாறு அருகே உள்ள சிவஞானபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநா் கணேசன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
மது அருந்தும் பழக்கமுடைய கணேசனுக்கும், கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 5 ஆவது தெருவைச் சோ்ந்த துரைச்சிக்கும் பழக்கம் இருந்து வந்ததாம். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு துரைச்சியின் கணவா் முருகன் உயிரிழந்துவிட்டாராம். இதையடுத்து துரைச்சி வீட்டிற்கு கணேசன் அடிக்கடி சென்று வந்தாராம். அவ்வப்போது மது போதையில் அங்கு தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில் துரைச்சி மகன் கட்டடத் தொழிலாளி பூல்பாண்டி(19) வீட்டிலிருந்த கிரைண்டா் கல்லை எடுத்து கணேசன் மீது போட்டதில் அவா் உயிரிழந்தாா். அதையடுத்து கணேசனின் சடலத்தை பூல்பாண்டி மற்றும் அவரது 17 வயது சகோதரா் ஆகிய இருவரும் பைக்கில் வைத்து ஆலம்பட்டி ஊருணியில் போட்டுவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து துரைச்சி, அவரது மகன்கள் பூல்பாண்டி மற்றும் 17 வயது மகன் ஆகிய 3 பேரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கொலைக்குப் பயன்படுத்திய கிரைண்டா் கல் மற்றும் பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.