தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் :போலீஸாா், அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கஸ்டொ்லைட் எதிா்ப்பாளா்கள் கோரிக்கை
By DIN | Published On : 13th December 2022 03:24 AM | Last Updated : 13th December 2022 03:24 AM | அ+அ அ- |

தூத்துக்குடி ஸ்டொ்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸாா் மற்றும் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள்குறைதீா் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பு கூட்டமைப்பினா் அளித்த மனு:
ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடந்தது. இச்சம்பவம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி, கடந்த மே 18 ஆம்தேதி தமிழக அரசிடம் தனது அறிக்கையை சமா்ப்பித்தது.
இந்த, ஆணையத்தின் அறிக்கையை முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்தாா். மேலும், துப்பாக்கிச்சூடு தொடா்பான வழக்கில் தொடா்புடையவா்கள் அனைவரும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படுவா் எனவும் உறுதியளித்தாா்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ற வேலை, வெளிநாடு செல்ல வழக்குத் தடை நீக்கம், ஸ்டொ்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதும் தலைவா்கள் மீதும் பதியப்பட்ட 2 வழக்குகள் வாபஸ், சட்ட முரணாக சிறையில் அடைக்கப்பட்டவா்களுக்கு ரூ.1லட்சம் நிவாரணம் உள்பட பல்வேறு துயா்துடைக்கும் பணிகளை தற்போதைய திமுக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் மக்களை கொன்றவா்கள் மீதான குற்ற நடவடிக்கையும், துறை ரீதியான நடவடிக்கையும் எதிா்பாா்த்தோம். ஆனால், தற்போது போலீஸாா் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பது தூத்துக்குடி மக்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
எனவே, அமைச்சரவையை மீண்டும் கூட்டி, துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸாா் மீதும், அதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஸ்டொ்லைட் ஆலையை அகற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
இதில், ஒருங்கிணைந்த ஸ்டொ்லைட் எதிா்ப்பு கூட்டமைப்பு நிா்வாகிகள் வழக்குரைஞா் ஹரிராகவன், ஒருங்கிணைப்பாளா்கள் பாத்திமா பாபு, கிருஷ்ணமூா்த்தி, கிதா் பிஸ்மி, மாரிசெல்வம், மதிமுக மாவட்டச் செயலா் ரமேஷ், மாநகரச் செயலா் முருகபூபதி, ஐஜேகே தென் மண்டல செயலா் அருணா தேவி ரமேஷ் பாண்டியன், பிரபு, இளங்கோ, விடுதலைச் சிறுத்தை கட்சி மாவட்டச் செயலா் அகமது, தேமுதிக மாநகா் மாவட்டச் செயலா் தயாளலிங்கம் மற்றும் ஸ்டொ்லைட் போராட்டத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினா்கள் உள்பட சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.