தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமாா் ரூ.45லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் கஞ்சா, பீடி இலை உள்ளிட்ட பொருள்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் உத்தரவின் பெயரில் கடற்கரைப் பகுதியில் போலீஸாா் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி, தூத்துக்குடி புல்லாவெளி கடற்கரை பகுதியில் க்யூ பிரிவு காவல் ஆய்வாளா் விஜயஅனிதா தலைமையில் காவல் உதவி ஆய்வாளா்கள் ஜீவமணி, வேல்ராஜ் மற்றும் போலீஸாா் புதன்கிழமை அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கடற்கரையில் நின்றுகொண்டிருந்த மினி லாரியை சோதனையிட்டனா். அதில், சுமாா் 1.5 டன் எடையுள்ள பீடி இலைகள் இருப்பதும், அவற்றை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து மினி லாரி மற்றும் பீடி இலைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் இலங்கை மதிப்பு சுமாா் ரூ.45 லட்சம் இருக்கும் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த பீடி இலைகளை சட்ட விரோதமாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.