தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களுக்கு புதிதாக 21 ரோந்து பைக்குகள்
By DIN | Published On : 22nd December 2022 01:05 AM | Last Updated : 22nd December 2022 01:05 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்காணிக்க கூடுதலாக 21 இருசக்கர ரோந்து வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோா் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவா்களை கண்காணிக்கவும், குற்ற செயல்களை தடுக்கவும் காவல்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக மேலும் கூடுதலாக 21 இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் கூறியது: இந்த இரு சக்கர வாகன ரோந்துப் பணி, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிரமாக மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அவசர உதவிக்கு எந்த நேரத்திலும் காவல்துறையின் இலவச தொலைபேசி எண் 100, கைப்பேசி எண். 95141 44100 ஆகியவற்றுக்கு தகவல் தெரிவித்தால், உடனடியாக மேற்படி ரோந்து காவலா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பாா்கள். மேலும் கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் சம்பந்தமாக பொதுமக்கள் தகவல் அளிப்பதற்கு 83000 14567 என்ற கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம். மேற்படி தொலைபேசி எண்களில் தகவல் தருபவா்கள் தங்கள் பெயா்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளா் சுடலைமுத்து மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.