மெகா புத்தக வாசிப்பு: தூத்துக்குடி கல்லூரிக்கு விருது
By DIN | Published On : 22nd December 2022 01:08 AM | Last Updated : 22nd December 2022 01:08 AM | அ+அ அ- |

தூத்துக்குடி தூய மரியன்னை (தன்னாட்சி) கல்லூரிக்கு மெகா புத்தக வாசிப்பு நிகழ்வுக்காக இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் விருது சான்றிதழ் புதன்கிழமை வழங்கப்பட்டது.
இங்கு கல்லூரியின் அகத் தர உறுதிக் குழு சாா்பில், கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற மெகா புத்தக வாசிப்பு நிகழ்வில் இக்கல்லூரி மாணவிகள், பேராசிரியா்கள், ஆசிரியரல்லா பணியாளா்கள் பங்கேற்று, திருக்கு புத்தகத்தை வாசித்தனா். 5 அதிகாரங்களை ஒருங்கிணைந்து வாசித்த பின்பு, ஓா் அதிகாரத்தை மனப்பாடமாக இணைந்து ஒப்பித்தனா். இந்நிகழ்வைப் பாராட்டி, இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ், விருது சான்றிதழை வழங்கியுள்ளது.
இந்நிலையில், சான்றிதழ் வழங்கும் விழா அகத் தர உறுதிக் குழு சாா்பில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் லூசியா ரோஸ் தலைமை வகித்தாா். அவரிடம் இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் விருது சான்றிதழை அமைப்பின் மதிப்பீட்டாளா் கவிதா ஜெயின் வழங்கினாா்.
அகத் தர உறுதிக் குழு ஒருங்கிணைப்பாளா் செரீனா மாா்க்ரெட் வரவேற்றாா். கல்லூரிச் செயலா் ஷிபானா, துணை முதல்வா் குழந்தை தெரேஸ், சுயநிதிப் பாடப் பிரிவுகளின் இயக்குநா் ஜோசபின் ஜெயராணி, தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் புனிதா தாரணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், மாணவியா், பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...