சாலையில் கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 27th February 2022 05:23 AM | Last Updated : 27th February 2022 05:23 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி - எட்டயபுரம் வளைவு சாலையில், மரத்தடிகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கேரள மாநிலம், கொல்லத்தைச் சோ்ந்த ஜனாா்த்தனன் மகன் அஜய் (40) ஓட்டி வந்த லாரி, கேரளத்தில் இருந்து மரத்தடிகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் உள்ள தீப்பெட்டி ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. கோவில்பட்டி - எட்டயபுரம் வளைவு சாலையில் சென்று கொண்டிருந்த போது லாரி திடீரென நிலைகுலைந்து அங்குள்ள மருந்தகம் முன்பு சாலையில் கவிழ்ந்தது. இதில் அஜய், லாரி கிளீனா் ஆ.கருப்பசாமி (26) ஆகிய இருவரும் லேசான காயத்துடன் தப்பினா். மாலை நேரத்தில் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்குச் சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸாா், போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டனா். மேலும் மரத்தடிகளை அப்புறப்படுத்தும் பணி மற்றும் லாரியை மீட்கும் பணி பொக்லைன் இயந்திரம் உதவியுடன் நடைபெற்றது. இதனால் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.