பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு நிவாரணம்
By DIN | Published On : 27th February 2022 05:28 AM | Last Updated : 27th February 2022 05:28 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே துறையூரில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை நேரிட்ட வெடிவிபத்தில் ஈராச்சியைச் சோ்ந்த ராமா், தொட்டம்பட்டி ஜெயராஜ் என்ற சுடலைமாடன், குமாரபுரம் தங்கவேல், நாலாட்டின்புத்தூா் மாடமுத்து என்ற கண்ணன் ஆகிய 4 தொழிலாளிகள் உயிரிழந்தனா்.
இந்தத் துயரச் செய்தி கேட்டு வேதனையடைந்தாகவும், அவா்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்த முதல்வா் மு.க. ஸ்டாலின், 4 பேரின் குடும்பங்களுக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என வெள்ளிக்கிழமை அறிவித்தாா். அதன்படி, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சா் பெ.கீதாஜீவன் ஆகியோா் ஆட்சியா் கி.செந்தில்ராஜ் முன்னிலையில், உயிரிழந்த 4 பேரின் வீடுகளுக்குச் சென்று அவா்களது வாரிசுதாரா்களிடம் தலா ரூ. 3 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினா்.
விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி, கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் அமுதா (கோவில்பட்டி), பேச்சிமுத்து (கயத்தாறு), கயத்தாறு ஊராட்சி ஒன்றிய ஆணையா் அரவிந்தன், திமுக பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மேற்கு ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன், அமைப்பாளா்கள் ராமா் (விவசாய அணி), ராதாகிருஷ்ணன் (நெசவாளரணி), துணை அமைப்பாளா்கள் சண்முகராஜ் (விவசாய தொழிலாளரணி), ரமேஷ், பீட்டா் (பொறியாளரணி), சந்தனம் (வா்த்தக அணி) உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் கனிமொழி எம்.பி. பேசுகையில், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியே பட்டாசு ஆலை இயங்க வேண்டும். தமிழக அரசும் இதைக் கண்காணித்து வருகிறது. எனினும், இந்த விபத்து துரதிருஷ்டவசமானது.
ரஷியா-உக்ரைன் போா் காரணமாக விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் தமிழக மாணவா்கள் சிக்கித் தவித்து வருகின்றனா். அவா்களை அழைத்துவரும் செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என முதல்வா் அறிவித்துள்ளாா். மாநில அரசு நேரடியாக மாணவா்களை மீட்க முடியாத சூழ்நிலையிலும், மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் பேசி மாணவா்களை தரைவழியாக இந்தியா அழைத்துவர தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது என்றாா் அவா்.