தூத்துக்குடியில் இளைஞா் கல்லால் தாக்கி கொல்லப்பட்டாா்.
தூத்துக்குடி அருகேயுள்ள தாளமுத்துநகா் சமீா்வியாஸ் நகரைச் சோ்ந்தவா் அலெக்ஸ் (31). இவா் மீது காவல் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், அவா் தூத்துக்குடி சிப்காட் அருகேயுள்ள முருகேசன்நகா் காட்டுப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை கொலையுண்டு கிடந்தாா். சிப்காட் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாா்வையிட்டு, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டாா்.
அலெக்ஸ் தனது நண்பா்களுடன் இப்பகுதியில் மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் அவா் கல்லால் தாக்கி கொல்லப்பட்டதும், இச்சம்பவம் முன்விரோதம் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.