‘தோ்தலை கருத்தில் கொண்டு அரசியல் செய்யும் இயக்கம் அதிமுக அல்ல’
By DIN | Published On : 14th January 2022 12:08 AM | Last Updated : 14th January 2022 12:08 AM | அ+அ அ- |

தோ்தலை கருத்தில் கொண்டு அரசியல் செய்யும் இயக்கம் அதிமுக அல்ல என்றாா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.
துறையூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உள்பட்ட சிவந்திபட்டி, தீத்தாம்பட்டி, கரிசல்குளம், துறையூா் கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை அவா் வழங்கினாா். துறையூா் ஊராட்சித் தலைவா் சண்முகலட்சுமி, அதிமுக ஒன்றியச் செயலா் அன்புராஜ், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை வடக்கு மாவட்டச் செயலா் துறையூா் கணேஷ்பாண்டியன், கோவில்பட்டி நகரச் செயலா் விஜயபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் கடம்பூா் செ. ராஜு பேசியது: பொங்கல் திருநாளையொட்டி ரூ. 100 உடன் பரிசுத் தொகுப்பு வழங்குவதை அப்போதைய முதல்வா் ஜெயலலிதா தொடக்கிவைத்தாா். அதையடுத்து, பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000, ரூ. 2,500 என படிப்படியாக உயா்த்தி வழங்கப்பட்டது.
தற்போதைய திமுக ஆட்சியில் 21 பொருள்களுடன் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதிலும் சில இடங்களில் பொருள்கள் முழுதாக கிடைக்கவில்லை. கடந்த முறை பரிசுத் தொகுப்புடன் ரூ. 2,500 ரொக்கம் வழங்கியதை தோ்தலைக் கருத்தில் கொண்டு அதிமுக அரசு வழங்குவதாக அப்போதைய எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டினாா். தோ்தலைக் கருத்தில் கொண்டு அரசியல் செய்யும் இயக்கம் அதிமுக அல்ல.
இம்மாவட்ட விவசாயிகளுக்கு இம்மாதம் 31-க்குள் பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை, மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்றால் அதிமுக தலைமைக்குழுவிடம் அனுமதி பெற்று கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடைபெறும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் குறை கூறியவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. திமுக ஆட்சி மிரட்டும் ஆட்சியாக உள்ளது என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...