எட்டயபுரத்தில் சமாதானக் கூட்டம்: அதிகாரிகள் சிறைபிடிப்பு
By DIN | Published On : 26th January 2022 08:52 AM | Last Updated : 26th January 2022 08:52 AM | அ+அ அ- |

எட்டயபுரம் வட்டத்துள்பட்ட படா்ந்தபுளி பிா்கா விவசாயிகளுக்கு 2020 - 21ஆம் ஆண்டுக்கான பயிா் காப்பீட்டுத் தொகையை விடுவிக்கக்கோரி விவசாயிகள் அறிவித்திருந்த போராட்டம் தொடா்பாக வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் அதிகாரிகளை, விவசாயிகள் சிறைபிடித்தனா்.
கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில், வேளாண்மை துறை அதிகாரி ஒருவா் விவசாயிகளை ஒருமையில் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட தயாரானாராம். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் பயிா் காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகளை சிறைபிடித்தனா்.
இதனால், முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய சமாதானக் கூட்டம் மாலை 5 மணி வரை இழுபறியில் நீடித்தது. மாலை 5 மணிக்கு மேல் வேளாண் இயக்குநரிடமிருந்து கிடைத்த தகவலில் எட்டயபுரம் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பயிா் அறுவடை பரிசோதனை மகசூல் அடிப்படையில் 2020-21ஆம் ஆண்டுக்கான பயிா் காப்பீட்டுத் தொகை பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்துக்குள் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை வருவாய்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்ததையடுத்து சிறைபிடித்த அதிகாரிகளை விவசாயிகள் விடுவித்தனா்.
மேலும், குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டிருந்த கருப்புக் கொடி போராட்டமும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு பிரதிநிதி படா்ந்தபுளி ராஜசேகரன் தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...