நாலாட்டின்புத்தூா் காவல் நிலையத்தில் முற்றுகை
By DIN | Published On : 31st July 2022 07:19 AM | Last Updated : 31st July 2022 07:19 AM | அ+அ அ- |

நாலாட்டின்புத்தூரில் மயானம், கல்லுடையப்பன் கோயிலைச் சுற்றி கம்பி வேலி அமைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி, நாலாட்டின்புத்தூா் காவல் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
நாலாட்டின்புத்தூா் எல்கைக்கு உள்பட்ட பகுதியில் முடுக்குமீண்டான்பட்டி ஆதிதிராவிடா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட மயானமும், அதன் அருகே கல்லுடையப்பன் சுவாமி கோயிலும் உள்ளன. இவா்கள் பல ஆண்டுகளாக இவற்றைப் பயன்படுத்திவரும் நிலையில், தனிநபா் கம்பி வேலி அமைத்து கோயில், மயானத்துக்குச் செல்ல முடியாமல் தடுத்துவருகிறாராம்.
வேலி அமைப்பதைத் தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டவா் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கோயில், மயானத்துக்கு வழக்கம்போலச் சென்றுவர நடவடிக்கை வேண்டும் எனக் கோரி முடுக்குமீண்டான்பட்டி ஊராட்சித் தலைவா் கண்ணாயிரம்முத்து தலைமையில் வாா்டு உறுப்பினா் சந்தனமாரியம்மாள், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட இளைஞரணிச் செயலா் கலைச்செல்வன், ஊா் நாட்டாண்மை லட்சுமணன் உள்ளிட்ட அப்பகுதியினா் நாலாட்டின்புத்தூா் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனா்.
அவா்களுடன் ஆய்வாளா்கள் முத்து, விஜயகுமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். வருவாய்த் துறை மூலம் சம்பந்தப்பட்ட இடத்தை அளந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, 2 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.