அச்சங்குளத்தில் ரூ.1.25 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
By DIN | Published On : 09th June 2022 03:14 PM | Last Updated : 09th June 2022 03:14 PM | அ+அ அ- |

கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அச்சங்குளம் ஊராட்சியில் ரூ.1.25 கோடியில் சாலை அமைத்தல், குறுங்காடு அமைத்தல் உள்ளிட்ட 7 வளா்ச்சிப் பணிகள் தொடக்க விழா புதன்கிழ’மை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, கயத்தாறு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா தலைமை வகித்து, திட்டங்களை தொடங்கி வைத்தாா். அச்சங்குளம் ஊராட்சியில் ரூ.21.99 லட்சம் மதிப்பில் அய்யனாா் கோயிலில் சாலை அமைத்தல், ரூ.13.17 லட்சம் மதிப்பில் சேவை மையம் அருகே மரக்கன்று நடுதல், ரூ.46.40 லட்சம் மதிப்பில் செவல்குளம் கண்மாய் அருகே குறுங்காடு அமைத்தல், ரூ.24.84 லட்சம் மதிப்பில் மயானம் அருகே குறுங்காடு அமைத்தல், ரூ.13.60 லட்சம் மதிப்பில் சேவை மையத்தின் தெற்குப் பகுதியில் குறுங்காடு அமைத்தல், ரூ.4.09 லட்சம் மதிப்பில் சால்நாயக்கன்பட்டியில் தரைநிலை குடிநீா் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது.
விழாவில், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய ஆணையா் அரவிந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா் பானு, அச்சங்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் தனலட்சுமி, துணைத் தலைவா் மரியஅந்தோணி ராயப்பன், ஊராட்சி செயலா் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.