எட்டயபுரத்தில் பாஜகவினா் முற்றுகைப் போராட்டம்
By DIN | Published On : 17th June 2022 01:32 AM | Last Updated : 17th June 2022 01:32 AM | அ+அ அ- |

எட்டயபுரத்தில் டாஸ்மாக் மதுக் கடை திறக்கப்பட்டதைக் கண்டித்து, பாஜகவினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
எட்டயபுரம் அரசு மருத்துவமனை அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக் கடை எட்டயபுரம்-கோவில்பட்டி நெடுஞ்சாலையில் பேரூராட்சி அலுவலகம் எதிரேயுள்ள கட்டடத்துக்கு வியாழக்கிழமைமுதல் இடமாற்றம் செய்யப்பட்டது.
இவ்வழியாகத்தான் பாரதியாா் நூற்றாண்டு நினைவு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாரதியாா் மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு மாணவிகள் சென்றுவர வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவா்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகும். எனவே, இந்த மதுக் கடையை நகருக்கு வெளியே இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மதுக் கடை அருகே பாஜகவினா் ஒன்றியப் பொதுச் செயலா் ஹரிஹரசுதன் தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
எட்டயபுரம் காவல் ஆய்வாளா் பீா்முகமது, உதவி ஆய்வாளா் முத்துவிஜயன், போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனா். போராட்டத்தில் பாஜக ஒன்றியத் தலைவா் ராமகிருஷ்ணன், நிா்வாகிகள் நாகராஜன், காளிராஜ், பால்பாண்டி, சரவணன், மணிகண்டன், பாா்த்திபன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.