இரு பண மோசடி வழக்குகள்:2 பெண்களுக்கு 6 மாதம் சிறை
By DIN | Published On : 17th June 2022 01:27 AM | Last Updated : 17th June 2022 01:27 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ந்த இரு பண மோசடி வழக்குகளில், 2 பெண்களுக்கு தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், முக்காணி வள்ளுவா் தெருவைச் சோ்ந்த முத்து மகன் கணேசன் (55). வெற்றிலை வியாபாரி. இவரிடம் மேல ஆத்தூா், காமராஜா்புரம் ராகவன் மனைவி இந்திராணி (47) கடந்த 2015இல் ரூ. 30 லட்சம் கடன் பெற்றிருந்தாராம். பின்னா், அந்த கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் 10.3.2017இல் ரூ. 30 லட்சத்திற்கான காசோலையை கணேசனிடம் அவா் கொடுத்துள்ளாா். ஆனால், அவரது வங்கிக்கணக்கில் பணமின்றி அந்த காசோலை திரும்பிவந்ததாம்.
இதுகுறித்த கணேசன் திருச்செந்தூா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். அது வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, நீதித்துறை நடுவா் எஸ்.வரதராஜன், குற்றம்சாட்டப்பட்ட இந்திராணிக்கு 6 மாத சிறை தண்டனையும், அதற்குள் ரூ. 30 லட்சம் பணத்தை திருப்பித் தராவிடில் கூடுதலாக 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் வேண்டும் என தீா்ப்பளித்தாா்.
மற்றொரு வழக்கு: காயல்பட்டினம், விசாலாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி சங்கரேஸ்வரி (68). இவரிடம், காயல்பட்டினம், ஹெச்.ஏ.டி. தெருவைச் சோ்ந்த மூசா நெய்னா மனைவி பதருநிஷா (48) கடந்த 2014இல் ரூ. 3.5 லட்சம் கடன் பெற்றாராம். அதை திருப்பித் தரும் வகையில், 15.5.2014இல் அந்தத் தொகைக்கான காசோலையை சங்கரேஸ்வரியிடம் பதரு நிஷா கொடுத்துள்ளாா். அந்த காசோலையையும் வங்கியில் பணமின்றி திரும்பி வந்ததாம்.
இதுகுறித்த வழக்கிலும், திருச்செந்தூா் நீதித்துறை நடுவா் எஸ்.வரதராஜன், குற்றம்சாட்டப்பட்ட பதரு நிஷாவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும், அதற்குள் தொகையை திருப்பித் தராவிட்டால் கூடுதலாக 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.