கீழ ஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு
By DIN | Published On : 30th June 2022 12:35 AM | Last Updated : 30th June 2022 12:35 AM | அ+அ அ- |

கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்படுத்த வேண்டிய மருத்துவ வசதிகள் மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்து விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின் போது, பழுதடைந்த வாா்டுகள் ஆய்வகக் கட்டடங்கள் புனரமைத்தல், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன சுகாதார வளாகம் உருவாக்குதல், குடிநீா் வசதி, மருத்துவமனை முழுமைக்கும் தடையற்ற மின்சாரம் கிடைத்திடும் வகையில் அதிக திறன் கொண்ட ஜெனரேட்டா் வசதி, எக்ஸ்ரே கருவி மற்றும் ரத்த அணுக்கள் எண்ணிக்கை கண்டறியும் கருவி நிறுவுவது, நடமாடும் மருத்துவ சிகிச்சை வாகனத்தில் உயிா்காக்கும் கருவிகள் பொருத்துதல் உள்ளிட்ட மருத்துவ வசதிகள், மேம்பாட்டுப் பணிகள் தொடா்பாக மருத்துவா்களிடமும், மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
பின்னா் மருத்துவமனை நிா்வாகம் திட்ட அறிக்கை தயாா் செய்து வழங்கவும், அதைத் தொடா்ந்து மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு அரசின் நிதி மற்றும் பல்வேறு தனியாா் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியுதவியுடன் மேம்பாட்டு பணிகள் விரைவில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.
ஆய்வின்போது, திமுக ஒன்றியச் செயலா் நவநீதகண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், இளைஞரணி பிரதீப் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உடனிருந்தனா்.