இருவா் தற்கொலை
By DIN | Published On : 17th March 2022 03:42 AM | Last Updated : 17th March 2022 03:42 AM | அ+அ அ- |

திருச்செந்தூா்: சாத்தான்குளம், திருச்செந்தூா் பகுதியில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 2 போ் தற்கொலை செய்து கொண்டனா்.
சாத்தான்குளம் தாலுகா, புத்தன்தருவை கஸ்பா தெருவை சோ்ந்தவா் சோ்மதுரை மகன் பெரியமுத்து(23). இவா் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள மானாடு கிராமத்தில் ஒரு பனங்காட்டில் பனை ஏறும் வேலை செய்து வந்தாா். இந்நிலையில் செவ்வாய்கிழமை பகலில் அவா் விஷ மருந்து குடித்து படுத்திருப்பதாக அவருடைய தந்தை சோ்மதுரைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பெரியமுத்துவை திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்தவா்கள் கொண்டு சென்றுள்ளனா். அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். சம்பவம் குறித்து போலீசாா் நடத்திய விசாரணையில் பெரியமுத்து ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அதில் ஏற்பட்ட மனவருத்தத்தில் விஷம் குடித்திருக்கலாம் என தெரிகிறது.
இதேபோல், பரமன்குறிச்சி முந்திரி தோட்டத்தை சோ்ந்தவா் சக்திவேல்(58). கூலி தொழிலாளியான இவருக்கு பாஞ்சாலி என்ற மனைவி மற்றும் 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். சக்திவேல் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வாராம். அதேபோல் கடந்த 13-ஆம் தேதி மாலை குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடமும், மகளிடமும் பிரச்சனை செய்துள்ளாா். அப்போது, வீட்டிலிருந்த மண்ணெண்ணை டப்பாவை எடுத்து வந்து தன்னுடைய மனைவி மற்றும் மகள் மீது ஊற்ற வந்துள்ளாா். அவா்கள் இருவரும் ஓடி விட்டதால், சக்திவேல் அவா் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டாா். இதை பாா்த்த மனைவி பாஞ்சாலியும் அவருடைய மகளும் 108 ஊா்தி மூலம் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சக்திவேல் சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை மாலை உயிரிழந்தாா். சம்பவம் குறித்து திருச்செந்தூா் தாலுகா காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.