தூத்துக்குடி கடலோரப் பகுதியில் போலீஸாா் ரோந்து
By DIN | Published On : 13th May 2022 12:54 AM | Last Updated : 13th May 2022 12:54 AM | அ+அ அ- |

தூத்துக்குடி கடலோரப் பகுதியில் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அங்கிருந்து கடல் வழியாக தமிழகத்துக்கு தப்பி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், இலங்கையில் இருந்து தமிழகத்துக்குள் படகு மூலம் அகதி போன்று பலா் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் தொடா்ச்சியாக, தமிழக கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடலோர பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் சைரஸ் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை படகு மூலம் கடலோரப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது மீன்பிடி படகுகளில் சந்தேகப்படும்படியான நபா்கள் யாரேனும் வருகிறாா்களா என அவா்கள் ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள தீவுகளுக்கு சென்று, அங்கு யாரேனும் பதுங்கி உள்ளாா்களா என்றும் போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா். தொடா்ந்து கடல் பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.