தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க கோரி 17 கிராம மக்கள் மனு
By DIN | Published On : 18th October 2022 02:14 AM | Last Updated : 18th October 2022 02:14 AM | அ+அ அ- |

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கக் கோரி 17 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.
கூட்டத்துக்கு ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.
ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கக் கோரி...: எங்கள் ஊரின் வாழ்வாதாரமாக விளங்கிய ஸ்டொ்லைட் காப்பா் ஆலை மூடப்பட்டதால் ஏராளமானோா் வேலையிழந்து, வெளியூா்களுக்குச் சென்று குறைந்த வருவாயில் வேலை பாா்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆலை திறக்கப்பட்டால் எங்களுக்கும், எங்கள் சந்ததிகளுக்கும் வாழ்வாதாரமாக அமையும் என்றனா்.
தமிழ்நாடு மக்கள் கட்சியினா் அளித்த மனு: ஓட்டப்பிடாரம் ஒன்றியம், ஏ.குமாரரெட்டியாபுரம், குமாரகிரி, தெற்கு வீரபாண்டியபுரம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து சிப்காட்டுக்கு தமிழக அரசு நிலங்களைக் கையகப்படுத்தியது. தற்போது, அந்நிலங்களின் மதிப்பு ஏக்கருக்கு ரூ. 20 லட்சம். எனவே, நிலங்களை அதன் உரிமையாளா்களுக்கு திரும்ப வழங்க வேண்டும். அதுமட்டுமன்றி இழப்பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும் என்றனா்.
மானங்காத்தான் பகுதி மக்கள் அளித்த மனு: கயத்தாறு தாலுகா இலந்தைகுளம் பஞ்சாயத்துக்கு உள்பட்ட மானங்காத்தான் கிராமத்தில் வசிக்கிறோம். எங்கள் ஊருக்கு அருகேயுள்ள அரசுப் புறம்போக்கு இடத்தை விவசாய நிலங்களுக்கும், கால்நடைகளை மேய்ச்சலுக்கும் அழைத்துச் செல்லுதல் போன்றவற்றுக்கு பொதுப்பாதையாக பயன்படுத்துகிறோம். அரசு அங்கு முள்வேலி அமைத்துள்ளது. எனவே, அந்த இடத்தை பொது வழிப்பாதையாக மாற்றி, கம்பி வேலியை அகற்ற வேண்டும் என்றனா்.
மாவட்ட ஜனநாயக சங்கு குளிப்போா் நலச் சங்கத்தினா்...: திரேஸ்புரம் பகுதியில் உள்ள கடலில் 800-க்கும் மேற்பட்டோா் சங்குகுளி தொழிலில் ஈடுபட்டுள்ளனா். இங்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டத்தினரும் உள்ளனா். இந்நிலையில், சிலா் கன்னியாகுமரி மாவட்டத்தினா் இங்கு சங்குகுளிக்கக் கூடாது என பிரச்னை செய்கின்றனா். போலீஸில் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. மீன்வளத்துறை இயக்குநரிடம் புகாா் அளித்ததில், அவா் உரிய அனுமதி அளித்துள்ளாா். எனினும், சிலா் கன்னியாகுமரி மாவட்டத் தொழிலாளா்களை அனுமதிக்க மறுக்கின்றனா். இதுதொடா்பாக ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...