டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 19th October 2022 01:53 AM | Last Updated : 19th October 2022 01:53 AM | அ+அ அ- |

கயத்தாறையடுத்த சன்னதுபுதுக்குடியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் திரளானோா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சன்னதுபுதுக்குடியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலா் முத்தையா ராமன் தலைமையில் செவ்வாய்க்கிழமை சன்னதுபுதுக்குடி அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனா்.
அதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் புதிய தமிழகம் கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட சாலையோரத்தில் திரண்டனா்.
தகவலறிந்தவுடன் கயத்தாறு காவல் ஆய்வாளா் முத்து, போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, இதுகுறித்து வட்டாட்சியா் மூலம் அரசுக்கு தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போராட்டத்தை கைவிடுமாறும் அறிவுறுத்தினாா்.
அதை ஏற்றுக் கொண்ட போராட்டக் குழுவினா், வட்டாட்சியா் அலுவலகம் முன் திரண்டனா். பின்னா், கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சுப்புலட்சுமி தலைமையில், ஆய்வாளா் முத்து முன்னிலையில், போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இதில், டாஸ்மாக் கடையை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலின்பேரில் ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் கடையில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் மதுபானக் கூடத்தை காவல் துறை மூலம் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.
முன்னதாக, இக்கோரிக்கையை வலியுறுத்தி சன்னதுபுதுக்குடி அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ஆா்ப்பட்டத்தில் ஈடுபட்டனா்.