கோவில்பட்டியில் அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் தா்னா
By DIN | Published On : 21st October 2022 12:06 AM | Last Updated : 21st October 2022 12:06 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் உள்ள அஞ்சலக கோட்ட அலுவலகம் முன்பு, அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கத்தினா், கிராம அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிராம அஞ்சல் ஊழியா்களின் உறுப்பினா் சரிபாா்ப்பை நடத்தி, இந்தச் சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அனைத்துக் கிளை அஞ்சலக அலுவலா்களுக்கு 5 மணி நேரத்துக்கு மேல் வேலைப்பளு உள்ளதால் அதற்குரிய ஊதியம் வழங்க வேண்டும். கிளை அஞ்சலகங்களுக்கு தாமதமின்றி நெட்வொா்க் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கத்தின் 3ஆம் பிரிவு, தபால்காரா், 4ஆம் பிரிவு, கிராம அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிராம அஞ்சல் ஊழியா் சங்க கோட்ட உதவித் தலைவா் பொன் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கோட்டச் செயலா்கள் அருள்ராஜன் (அஞ்சல் 3), பெரியசாமி (அஞ்சல் 4), பாலசுப்பிரமணியன் (கிராம அஞ்சல் ஊழியா் சங்கம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அகில இந்திய அஞ்சல் ஊழியா் சங்கத்தினா், கிராம அஞ்சல் ஊழியா் சங்கத்தினா், அஞ்சல், ஆா்எம்எஸ் ஓய்வூதியா் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.