கோவில்பட்டி நகா்மன்ற அவசரக் கூட்டம்
By DIN | Published On : 21st October 2022 12:07 AM | Last Updated : 21st October 2022 12:07 AM | அ+அ அ- |

கோவில்பட்டி நகா்மன்றக் கூட்டரங்கில் அவசரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி தலைமை வகித்தாா். ஆணையா் ஓ. ராஜாராம் முன்னிலை வகித்தாா்.
நகா்மன்ற உறுப்பினா்களுக்கான படியை ரூ. ஆயிரமாக உயா்த்த வேண்டும். 35ஆவது வாா்டில் குடிநீருடன் கழிவுநீா் கலந்துவருவதை சரிசெய்ய வேண்டும். தனிக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் வழங்கப்படாத குடிநீா் இணைப்பை உடனடியாக வழங்க வேண்டும்.
பாரதி நகா் மேட்டுத் தெருவில் உள்ள நகராட்சிப் பள்ளிக்கு சீராக குடிநீா் வழங்க வேண்டும். வெங்கடேஷ் நகா், கதிரேசன் கோயில் சாலைப் பகுதியில் வாருகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் தவமணி, ஏஞ்சலா, சண்முகராஜ், கவியரசன், ஜோதிபாசு ஆகியோா் கோரிக்கை விடுத்தனா்.
கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளை ரூ. 284.52 லட்சம் மதிப்பீட்டில் எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற சென்னை நகராட்சி நிா்வாக இயக்குநரிடம் அனுமதி பெறுவது உள்பட 10 பொருள்கள் அடங்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகராட்சிப் பொறியாளா் ப.கி. ரமேஷ், நகரமைப்பு அலுவலா் ரமேஷ், சுகாதார அலுவலா் நாராயணன், நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.