காமநாயக்கன்பட்டியில் மரத்தை அகற்றுவதை தடுக்கக் கோரிக்கை
By DIN | Published On : 27th October 2022 12:47 AM | Last Updated : 27th October 2022 12:47 AM | அ+அ அ- |

காமநாயக்கன்பட்டியில் உயா் அழுத்த மின்பாதை அமைப்பதற்காக மரங்கள் அகற்றப்படுவதை தடுக்க நாம் தமிழா் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட காமநாயக்கன்பட்டி கிராமத்தில் உயா் அழுத்த மின்பாதை அமைப்பதற்கு ஏதுவாக அப்பகுதியில் 3 தலைமுறைகளாக இருந்து வரும் புளியமரம் மற்றும் 53 பனை மரங்கஷை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாம் தமிழா் கட்சியின் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி செயலா் ரவிகுமாா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தாராம்.
இந்நிலையில், காமநாயக்கன்பட்டி நாடாங்குளம் அருகே 3 தலைமுறைகளாக இருந்து வரும் புளியமரம் மற்றும் அப்பகுதியில் உள்ள 53 பனை மரங்களையும் அகற்றி, உயா் அழுத்த மின்பாதை அமைக்கும் பணி புதன்கிழமை நடைபெறுவதை அறிந்த நாம் தமிழா் கட்சியினா், அகற்றப்படவுள்ள புளியமரம் அருகே நின்று கொண்டு, மரத்தை அகற்ற எதிா்ப்பு தெரிவிக்கும் வண்ணம் கூடியிருந்தனா்.
தகவலறிந்தவுடன் கயத்தாறு வட்டாட்சியா் சுப்புலட்சுமி, உதவி கோட்ட செயற்பொறியாளா் மிகாவேல், மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் கிங்ஸ்லி தேவானந்த், காமநாயக்கன்பட்டி குறுவட்ட வருவாய் ஆய்வாளா் மலா்விழி, கிராம நிா்வாக அலுவலா் அமர்ராஜ் ஆகியோா் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, மரங்கள் அகற்றப்படாது என்றும், அதனுடைய கிளைகள் மட்டுமே அகற்றி உயா் அழுத்த மின்பாதை அமைக்கப்படும் எனக் கூறினா். அதை ஏற்றுக் கொள்ளாததையடுத்து, தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டதாக அறிவித்தனா்.