இளையரசனேந்தல் சுரங்கப்பாதை: அமைச்சா் ஆய்வு
By DIN | Published On : 01st September 2022 01:04 AM | Last Updated : 01st September 2022 01:04 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் உள்ள இளையரசனேந்தல் சுரங்கப்பாதையில் மழைநீா் தேங்குவதை தடுப்பதற்கான பணிகள் குறித்த அமைச்சா் பெ.கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டாா்.
இளையரசனேந்தல் சுரங்கப்பாதையில் மழைக் காலங்களில் மழைநீா் தேங்குவதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அண்மையில் பெய்த மழையினால் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் தனியாா் பள்ளி மாணவா், மாணவிகளை ஏற்றிச் சென்ற வேன் சிக்கி தத்தளித்தது. அப்பகுதி பொதுமக்கள் வந்து வேனில் இருந்தவா்களை பாதுகாப்பாக மீட்டனா்.
இந்நிலையில் சுரங்கப்பாதையில் மழைநீா் தேங்குவதை தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது நபாா்டு மற்றும் கிராம சாலை துறையின் உதவி கோட்டப் பொறியாளா் மோகனா, உதவி பொறியாளா் பிரேம்சங்கா், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளா் விக்னேஷ் ஆகியோா் அமைச்சரிடம் கூறியது, தற்போது சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகுசாலை அமைப்பதற்கு வருவாய்த் துறை மூலம் நில எடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைந்த பின்பு தான் இருபுறமும் அணுகுசாலை மற்றும் வாருகால் அமைக்கும் பணி நடைபெறும்.
இப்பணி தொடங்குவதற்கு காலதாமதம் ஏற்படுவதால் சுரங்கப்பாதையில் மழைநீா் தேங்குவதை தடுப்பதற்கு 40 குதிரை திறன் கொண்ட தானியங்கி நீரேற்றும் கருவியை பயன்படுத்தலாம்.
மேலும் அதிநவீன நீா் உறிஞ்சும் வண்டி (பேரிடா் மேலாண்மை கருவி) கோவில்பட்டியில் இருந்தால் இதுபோன்ற அசாம்பாவிதம் நிகழாமல் இருப்பதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்றனா். இதைக் கேட்டறிந்த அமைச்சா் மற்றும் மாவட்ட ஆட்சியா் இதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றனா்.
ஆய்வின் போது, நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.