கே.ஆா்.சாரதா அரசுப் பள்ளி நில உரிமை ஆவணங்கள் கல்வித் துறையிடம் ஒப்படைப்பு
By DIN | Published On : 01st September 2022 01:02 AM | Last Updated : 01st September 2022 01:02 AM | அ+அ அ- |

நாலாட்டின்புத்தூா் கே.ஆா்.சாரதா அரசு மேல்நிலைப் பள்ளியின் நில உரிமை ஆவணங்கள் முறையாக பத்திரப்பதிவு செய்து தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவில்பட்டி வட்டம், நாலாட்டின்புத்தூா் கே.ஆா்.சாரதா மேல்நிலைப் பள்ளியில் சுமாா் 850 மாணவா், மாணவிகள்
பயின்று வருகின்றனா். இப்பள்ளிக்கு கே.ஆா்.கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.ராமசாமி நடுநிலைப்பள்ளியை உயா்நிலைப்பள்ளியாக தரம் உயா்த்திட 1983 ஆம் ஆண்டு தமிழக அரசுக்கு வைப்பு நிதியாக ரூ.1 லட்சமும், 2000ஆம் ஆண்டு ரூ. 2 லட்சமும் வழங்கி அவற்றிற்கு தேவையான இடத்தையும், கட்டடங்களையும் கட்டி கொடுத்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயா்த்திட வழிவகை செய்தாா். அதையடுத்து தமிழக அரசு அப்பள்ளிக்கு கே.ராமசாமி மகளின் நினைவாக கே.ஆா்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளி என பெயா் சூட்டியது.
இந்நிலையில், கோவில்பட்டி வட்டம் முடுக்குமீண்டான்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட சுமாா் 1. 80 ஏக்கா் நிலத்தை கே.ஆா்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்திற்கான நில உரிமை ஆவணங்களை அண்மையில் முறையாக பத்திரப்பதிவு செய்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணியிடம் கே.ஆா்.கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம் ஆக.29ஆம் தேதி ஒப்படைத்தாா்.
அப்போது, தலைமையாசிரியா் சீனி, முன்னாள் தலைமையாசிரியா் ஜெயபால் ஆகியோா் உடனிருந்தனா்.