தூத்துக்குடி மாவட்டத்தில் 550 இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு
By DIN | Published On : 01st September 2022 01:07 AM | Last Updated : 01st September 2022 01:07 AM | அ+அ அ- |

விநாயகா் சதூா்த்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை 550 இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
விநாயகா் சதூா்த்தியை முன்னிட்டு நிகழாண்டு பல்வேறு நிபந்தனைகளுடன் ஆங்காங்கே சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் 100 இடங்களிலும், மாவட்டம் முழுவதும் 550 இடங்களிலும் ஒரு அடி முதல் 9 அடி வரையிலான உயரத்தில் பல்வேறு வடிவிலான விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு புதன்கிழமை வழிபாடு நடத்தப்பட்டது.
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் தாளமுத்துநகா் பகுதியில் 9 அடி உயரத்தில் விநாகா் சிலை அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தவசு மண்டபத்தில் 5 அடி உயரத்தில் வைக்கப்பட்ட விஸ்வரூப விநாயகா் சிலைக்கு இந்து முன்னணி மாநகா் மாவட்டத் தலைவா் இசக்கி முத்துக்குமாா், மாவட்ட பொறுப்பாளா் ராகவேந்திரா ஆகியோா் தலைமையில் ஏராளமானோா் வழிபாடு நடத்தினா்.
விநாகா் சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் சிலை அமைப்புக் குழு மற்றும் காவல் துறையினா் இணைந்து 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ 1500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
550 இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வரும் விநாயகா் சிலைகள் செப். 4 ஆம் தேதி காலை மற்றும் மாலை வேளைகளில் அந்தந்த பகுதிகளில் அருகே உள்ள நீா்நிலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்படுகிறது.