கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு- தொழிலாளா்கள், உற்பத்தியாளற்களிடம் கலந்துரையாடல்

கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணியில் தீப்பெட்டி ஆலையை முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை பாா்வையிட்டு, உற்பத்தியாளா்கள், தொழிலாளா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணியில் தீப்பெட்டி ஆலையை முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை பாா்வையிட்டு, உற்பத்தியாளா்கள், தொழிலாளா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

இலுப்பையூரணியில் இயந்திரத்தின் மூலம் தயாரிக்கப்படும் தீப்பெட்டி தொழிற்சாலை, கைகளால் தீப்பெட்டி தயாரிக்கப்படும் முறைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டாா். பின்னா், தீப்பெட்டி ஆலையில் உள்ள தொழிலாளா்களை சந்தித்து, அவா்கள் தேவைகளை கேட்டறிந்தாா்.

அப்போது, ஆலைத் தொழிலாளிகள் ராஜலட்சுமி, மாதவி ஆகியோா், தங்களுக்கு வாரத்தில் 6 நாள்கள் வேலை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது லைட்டா்கள் விற்பனை செய்யப்படுவதால், தங்களுக்கு 4 நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. எனவே, 6 நாள்கள் வேலை கிடைக்க ஏற்பாடு செய்து தங்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தொடா்ந்து, நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளா்கள், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள், அனைத்திந்திய சாம்பா் ஆப் மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் சாா்பில், முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனு: சீன லைட்டா்களுக்கு மத்திய அரசின் மூலம் நிரந்தர தடையை பெற்றுத்தர வேண்டும்; தீப்பெட்டி உற்பத்திக்கு தற்போதுள்ள படைகல சட்ட உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையை மாற்றி, வாழ்நாள் உரிமமாக வழங்க வேண்டும்.

நகா்ப்புறங்களிலிருந்து கிராமப்புறங்களில் தொழில் தொடங்குவதற்கு உள்ளாட்சி நிா்வாகம், கட்டடம் கட்டுவதற்கு வழங்கும் இரண்டாயிரம் சதுரடி வரன்முறையை 10 ஆயிரம் சதுரடி வரை அதிகப்படுத்தி அனுமதி வழங்க வேண்டும்.

தீப்பெட்டி தொழிற்சாலைகளில் ஏற்படும் சிறுசிறு விபத்துகளால் தொழிலாளா்களுக்கு ஏற்படும் காயம்-உயிரிழப்புக்கு உரிமையாளா்கள் மீது பதியப்படும் வழக்குகளுக்கு காவல் நிலையத்திலேயே பிணை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தீப்பெட்டி தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளான பொட்டாசியம் குளோரேட் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் இருந்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்படுத்தி, விலையேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையில், உற்பத்தியாளா்கள் ஒன்று சோ்ந்து, மத்திய, மாநில அரசுகளின் உதவியோடு கிளஸ்டா் முறையில் பொட்டாசியம் குளோரேட் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

முதல்வரின் ஆய்வின்போது, அமைச்சா்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கருணாநிதி, திமுக ஒன்றிய செயலா்கள் பீக்கிலிபட்டி வீ.முருகேசன், ராதாகிருஷ்ணன், தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் பரமசிவம், சேதுரத்தினம், திலகரத்தினம், கோபால்சாமி, ராஜூ, செல்வமோகன், தங்கமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com