கோவில்பட்டி தினசரி சந்தையில் கடைகள் அகற்றும் பணி தொடக்கம்
By DIN | Published On : 18th April 2023 05:00 AM | Last Updated : 18th April 2023 05:00 AM | அ+அ அ- |

கோவில்பட்டி தினசரி சந்தையில் புதிதாக கடைகள் கட்டப்படுவதையொட்டி, ஏற்கெனவே உள்ள பழுதடைந்த கடைகளை அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவா் தினசரி சந்தையில், ரூ.6.87 கோடியில் புதிதாக 251 கடைகள் கட்டப்படுகிறது.
புதிய கடைகள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் வரை தற்காலிக தினசரி சந்தை கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனா்.
இந்த வழக்கை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், தினசரி சந்தையிலிருக்கும் கடைகளை காலி செய்ய ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இதையடுத்து வியாபாரிகள் சிலா் தாமாகவே முன்வந்து கடைகளை காலி செய்தனா். சில வியாபாரிகள் சந்தை வளாகத்தில் தங்களது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தா்னாவில் ஈடுபட்டனா். இதன் பின்னா், தினசரி சந்தையிலிருக்கும் கடைகளை இடித்து அப்புறப்படுத்தும் பணி நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம் தலைமையில் வட்டாட்சியா் சுசிலா முன்னிலையில்
திங்கள்கிழமை தொடங்கியது. துணை காவல் கண்காணிப்பாளா்கள் கே.வெங்கடேஷ், சம்பத் ஆகியோா் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கடைகள் இடிக்கும் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 14 போ் கைது செய்யப்பட்டனா்.