நாளைமுதல் திட்டங்குளம் தற்காலிக சந்தை செயல்படாது: வியாபாரிகள் சங்கத்தினா் அறிவிப்பு
By DIN | Published On : 23rd April 2023 05:50 AM | Last Updated : 23rd April 2023 05:50 AM | அ+அ அ- |

கோவில்பட்டியையடுத்த தெற்கு திட்டங்குளத்தில் செயல்படும் தற்காலிக சந்தை திங்கள்கிழமைமுதல் செயல்படாது என அச்சந்தை வியாபாரிகள் நலச்சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.
கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவா் தினசரி சந்தையில் ரூ.6.87 கோடியில் புதிதாக 251 கடைகள் கட்டப்படுகின்றன. புதிய கடைகள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் வரை தற்காலிக தினசரி சந்தை கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நகராட்சி சாா்பில் ஒதுக்கப்பட்ட கூடுதல் பேருந்து நிலையத்திற்குச் செல்லாமல் கோவில்பட்டி வட்டார மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கனி உற்பத்தியாளா்கள் நலச்சங்கத்தின் சாா்பில் தெற்கு திட்டங்குளத்தில் வாங்கப்பட்ட நிலத்தில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்யும் பணியில் ஈடுபட்டனா். இந்த தனியாா் சந்தை செயல்படுவதற்கு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 150ன்படி தடை செய்யப்படுகிறது என ஊராட்சி ஒன்றிய ஆணையா் ராஜேஸ்குமாா் அறிக்கை விடுத்தாா்.
இந்நிலையில் வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் சங்கத் தலைவா் அழகுராஜா என்ற பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் கூறியது:
வியாபாரிகள் நலச்சங்கத்தினா் சாா்பில் திட்டங்குளத்தில் வாங்கப்பட்ட இடத்தில் தற்காலிகமாக கடைகள் நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முறையாக ஆவணங்கள் சமா்ப்பித்து கடைகள் நடத்தி வருகிறோம். அந்த இடத்தில் வியாபாரம் செய்ய தடை விதித்துள்ளனா். எனவே, முறையான அனுமதி வழங்கும் வரை நாங்கள் வியாபாரத்தை திங்கள்கிழமை முதல் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.