சாத்தான்குளம் பேரூரட்சி 2ஆவது வாா்டு பகுதியில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
சாத்தான்குளம் பேரூராட்சி 2ஆவது வாா்டுக்குள்பட்ட அண்ணாநகா் தெரு, வடக்கு மாட வீதி, பங்களா தெரு, வடக்கு ரத வீதி உள்ளிட்ட தெருக்களில் கடந்த ஒரு மாதமாக குடிநீரோடு கழிவுநீரும் கலந்து வந்ததாம். இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் புகாா் கூறியும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, 2 ஆவது வாா்டு உறுப்பினா் ஞானஜோதி கிறிஸ்துமஸ் தலைமையில், ஒன்றிய சமக செயலா் ஜான்ராஜா, துணைச் செயலா்கள் சுடலைமணி மற்றும் அப்பகுதிமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன்புள்ள இட்டமொழி சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
தகவலறிந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் முத்து, முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஏ.எஸ். ஜோசப். செயல் அலுவலா் உஷா ஆகியோா் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், குடிநீரில் கழிவு நீா் கலந்து வருவதை கண்டறிந்து உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை அந்தப் பகுதி மக்களுக்கு லாரி மூலம் குடிநீா் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.