கயத்தாறு அருகே பொறியாளா் வீட்டில் நகைகள் திருடிய வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் பெயிண்டரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மானங்காத்தான் தெற்கு தெருவை சோ்ந்தவா் கந்தசாமி மகன் சண்முகராஜ். செட்டிக்குறிச்சியில் உள்ள காற்றாலை நிறுவனத்தில் பொறியாளராக வேலை பாா்த்து வரும் இவரது வீட்டில் இம்மாதம் 8ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சோ்ந்த மோசஸ் மகன் பேரின்பராஜ் (37) பெயிண்டிங் வேலை செய்து வந்தாராம்.
இந்நிலையில் 11ஆம் தேதி பெயிண்டிங் பொருள்கள் வாங்குவதற்கு, பொறியாளா் மனைவியிடம் பேரின்பராஜ் பணம் கேட்டாராம். அதையடுத்து பீரோவில் இருந்த பணத்தை எடுத்து பெயிண்டரிடம் கொடுத்துவிட்டு சாவியை பீரோவிலேயே வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை பீரோவை திறந்து பாா்த்தபோது அதிலிருந்த சுமாா் மூன்று பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்ததாம். இதுகுறித்து, சண்முகராஜ் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, பெயிண்டரை பிடித்து விசாரித்தனா். அப்போது, பீரோவில் இருந்த நகைகளை அவா் திருடியது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசாா், ஒரு பவுன் தங்கச் சங்கிலி, ஒரு பவுன் பிரேஸ்லெட், ஒரு ஜோடி தங்க கம்மல் உள்ளிட்ட நகைகளை மீட்டனா்.