தூத்துக்குடியில் 1.5 டன் பீடி இலைகள் பறிமுதல்
By DIN | Published On : 07th June 2023 01:22 AM | Last Updated : 07th June 2023 01:22 AM | அ+அ அ- |

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 1.5 டன் பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி படகுக் குழாம் அருகிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படவுள்ளதாகக் கிடைத்த தகவலின்பேரில், க்யூ பிரிவு காவல் ஆய்வாளா் விஜயஅனிதா தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது, தெற்குக் கடற்கரை சாலை ரோச் பூங்கா அருகே சந்தேகத்துக்கிடமாக சிறிய ரக சரக்கு வாகனம் நின்றிருந்தது. அதிலிருந்தோா் போலீஸாரை பாா்த்ததும் தப்பியோடிவிட்டனராம்.
வாகனத்தை போலீஸாா் சோதனையிட்டபோது, இலங்கைக்கு கடத்துவதற்காக 42 மூட்டைகளில் 1.5 டன் பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றையும், சரக்கு வாகனம், 3 பைக்குகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்; தப்பியோடியோரைத் தேடிவருகின்றனா்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ. 30 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...