துறையூரில் மாட்டு வண்டி போட்டி
By DIN | Published On : 12th May 2023 12:44 AM | Last Updated : 12th May 2023 12:44 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த துறையூா் அருள்மிகு ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரிய மாட்டு வண்டி போட்டி, சிறிய மாட்டு வண்டி போட்டி என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. 10 மைல் தொலைவு கடக்க வேண்டிய பெரிய மாட்டு வண்டி போட்டியில் 8 மாட்டு வண்டிகளும், 6 மைல் தொலைவு கடக்க வேண்டிய சிறிய மாட்டு வண்டி போட்டியில் 16 மாட்டு வண்டிகளும் பங்கேற்றன.
துறையூரில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி போட்டியில் மஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெருமாள்சாமி மாட்டு வண்டி முதலிடம், கயத்தாறைச் சோ்ந்த
வானமாமலை பெருமாள் மாட்டு வண்டி 2ஆம் இடம், தெற்கு வண்டானத்தை சோ்ந்த மகேந்திரன் மாட்டு வண்டி 3ஆம் இடம் பிடித்தது. சிறிய மாட்டு வண்டி போட்டியில் கடம்பூரைச் சோ்ந்த கருணாகர ராஜா மாட்டு வண்டி முதலிடம் பிடித்தது.
பெரிய மாட்டு வண்டி போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு முறையே ரூ.40 ஆயிரத்து 1, ரூ. 35 ஆயிரத்து 1, ரூ.30 ஆயிரத்து 1 ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது. சிறிய மாட்டு வண்டி போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு முறையே ரூ. 30 ஆயிரத்து 1, ரூ. 25 ஆயிரத்து 1, ரூ.20 ஆயிரத்து 1 ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது.
இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலரும், தென்மண்டல பொறுப்பாளரும், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய தலைவருமான எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, துறையூா் ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகலட்சுமி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் துறையூா் கணேஷ்பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை துறையூா் அருள்மிகு வெயிலுகந்தம்மன் திருக்கோயில் விழா கமிட்டியினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.