திருச்செந்தூரில் ஆதரவற்ற மன நலம் பாதித்தோா் மீட்பு மையம்: கனிமொழி எம்.பி. திறந்துவைத்தாா்
By DIN | Published On : 22nd May 2023 02:50 AM | Last Updated : 22nd May 2023 02:50 AM | அ+அ அ- |

திருச்செந்தூரில் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட ஆதரவற்ற மன நலம் பாதிக்கப்படடோருக்கான அவசர சிகிச்சை - மீட்பு மையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் முன்னிலை வகித்தாா். தி பெனியன் - பெனியன் அகாதெமி இயக்குநா் கிஷோா் குமாா் வரவேற்றாா். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி, அவசர சிகிச்சை- மீட்பு மையத்தை குத்துவிளக்கேற்றி வைத்து திறந்து வைத்து பேசியதாவது:
ஆன்மிக சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றான திருச்செந்தூரில், மாநிலத்தின் 10ஆவது ஆதரவற்ற மனநல காப்பக அவசர சிகிச்சை - மீட்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு, மன நலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையும், அவா்களின் மறுவாழ்வுக்கான பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்படும். இந்தப் பகுதியில் உள்ள ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இம்மையம் அமைந்துள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட சுகாதாரம் - ஊரகப் பணிகள் துறை இணை இயக்குநா் கற்பகம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சிவக்குமாா், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பொற்செல்வன், கோட்டாட்சியா் புஹாரி, வட்டாட்சியா் வாமணன், திருச்செந்தூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் பொன்ரவி, நகராட்சித் தலைவா் ர.சிவஆனந்தி, துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ், திமுக நகரச் செயலா் வாள் சுடலை, மாவட்ட மீனவரணி அமைப்பாளா் ஸ்ரீதா் ரொட்ரிகோ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஆா்-சோயா நிறுவனா் சரவணன் நன்றி கூறினாா்.