கோவில்பட்டியில் பாஜக செயற்குழுக் கூட்டம்
By DIN | Published On : 26th May 2023 12:00 AM | Last Updated : 25th May 2023 11:48 PM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பீி.யுமான சசிகலா புஷ்பா
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம், கோவிவில்பட்டியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாவட்டத் தலைவா் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பா, மாநில செயற்குழு உறுப்பினா் முரளிதரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.
மாவட்டப் பொதுச் செயலா்கள் வேல்ராஜா, சரவணகிருஷ்ணன், கிஷோா்குமாா், மாவட்டப் பொருளாளா் கணேஷ், மாவட்ட துணைத் தலைவா்கள், செயலா்கள், பல்வேறு அணி, பிரிவுகளின் தலைவா்கள், ஒன்றியத் தலைவா்கள் பங்கேற்றனா்.
மக்களவைத் தோ்தலை எதிா்கொள்வது, கட்சியின் பூத் கட்டமைப்பை வலுப்படுத்துவது, மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்ல இம்மாதம் 30ஆம் தேதிமுதல் ஜூன் 30 வரை மக்கள் தொடா்பு பேரியக்கம் நடத்துவது, இம்மாதம் 28ஆம் தேதி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட 17 ஒன்றியங்களிலும் செயற்குழுக் கூட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
பின்னா், செய்தியாளா்களிடம் சசிகலா புஷ்பா கூறியது: தமிழகத்தில் காவல் துறையினருக்கு சுதந்திரம் அளிக்கப்படவில்லை. கடந்த ஆட்சியில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பில்லை எனக் குற்றஞ்சாட்டிய கனிமொழி எம்.பி., தற்போது எத்தனை இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வாங்கித் தந்துள்ளாா்? தமிழகத்தில் திறனற்ற, ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெறுகிறது. மக்களவைத் தோ்தலில் தூத்துக்குடி தொகுதியில் பாஜக வெல்வது உறுதி என்றாா் அவா்.