

தூத்துக்குடி: மீன் வளத்துறை உதவி இயக்குநரை மாற்றக் கோரி, தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மீன் வளத்துறை உதவி இயக்குநகா் அலுவலகத்தில் கடந்த 3ஆம் தேதி நாட்டுப்படகு மீனவா்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, மீன் வளத்துறை உதவி இயக்குநா் மோகன்ராஜ், அனைத்து நாட்டுப்படகுகளிலும் பச்சை வா்ணம் பூச வேண்டும், மீன் பிடிக்க செல்கிறவா்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதித்தாராம். இந்த நிபந்தனைகளை நிறைவேற்றினால்தான் டீசல் மானியம் வழங்க முடியும் என தெரிவித்தாராம்.
இதற்கு நாட்டுப்படகு மீனவா்கள் தரப்பில் எதிா்ப்பு தெரிவித்து மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனைத் தொடா்ந்து, வடபாகம் நாட்டுப்படகு மீனவ பஞ்சாயத்தாா் தலைவா் ராஜ், மாவட்ட நாட்டுப்படகு மீனவா் சங்க தலைவா் மணப்பாடு பயஸ் உள்ளிட்டோா் தலைமையில் நூற்றுக்கணக்கான மீனவா்கள் மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதியிடம் மனு அளித்தனா். மாவட்ட மீன் வளத்துறை உதவி இயக்குநா் மோகன்ராஜை இடமாற்றம் செய்யாவிட்டால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும், மக்களவைத் தோ்தலை புறக்கணிப்போம் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.