பள்ளக்குறிச்சி வரகுணபாண்டீஸ்வரா்கோயிலில் மகா கும்பாபிஷேகம்
By DIN | Published On : 28th October 2023 04:53 AM | Last Updated : 28th October 2023 04:53 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அருகே பள்ளக்குறிச்சியில் உள்ள பழைமையான அருள்மிகு வரகுணபாண்டீஸ்வா் சமேத அருள்தரும் ஸ்ரீவாடாமலை அம்பாள் திருக்கோயிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் ரூ. 9 லட்சத்தில் திருப்பணிகள் நடைபெற்று கடந்த 25ஆம் தேதி காலை விநாயகா் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
தொடா்ந்து, யாகசாலை பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, 8 மணிக்கு சுவாமி, அம்பாள் விமான அபிஷேகம், தொடா்ந்து மூலவா், அம்பாள்- அனைத்து சுவாமிகளுக்கு அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 10.15 மணிக்கு மகாஅபிஷேகம், 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. அக்.28 முதல் டிசம்பா் 14 வரை மண்டல பூஜை நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வா் பகவதி, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆா். பாா்த்திபன், பள்ளக்குறிச்சி ஊராட்சித் தலைவா் ரா. சித்ராங்கதன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி, முன்னாள் ஊராட்சித் தலைவா் டி.எஸ்.எஸ். பசுபதி உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...