

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தூத்துக்குடியில் உள்ள ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமை வகித்து, நலத்திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை கோரி பொதுமக்கள் அளித்த 443 மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறைசாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
சீா்மரபினா் நலச் சங்கத்தினா் அளித்த மனு: சீா்மரபினா் வகுப்பில் 68 சமுதாயத்தைச் சோ்ந்தோா் உள்ளனா். இவா்களுக்கு தற்போது தமிழக அரசு டிஎன்டி, டிஎன்சி என்ற சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இதனால், கல்வி, வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழக அரசு தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி டிஎன்டி என்ற ஒற்றைச் சான்றிதழை வழங்க வேண்டும். இதுதொடா்பாக இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னையில் உள்ள மு.கருணாநிதி நினைவிடத்தில் அக். 3இல் சீா்மரபினா் நலச் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றனா்.
சாத்தான்குளம் அருகே வேலாயுதபுரம் கிராம மக்கள் அளித்த மனு: வேலாயுதபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். 6 மாதங்களுக்கும் மேலாக குடிநீா் இல்லாமல் அவதிப்படுகிறோம். கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி புதுக்குளம் சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சித் தலைவா், சாத்தான்குளம் ஒன்றியத் தலைவா் ஆகியோரிடம் குடிநீா்த் தட்டுப்பாடு தொடா்பாக மனு அளிக்கப்பட்டது. தொடா்ந்து , வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. கடந்த மாதம் திருச்செந்தூா் - வள்ளியூா் பிரதான சாலையில் மறியலில் ஈடுபடமுயன்றபோது பிரச்னையை சரிசெய்வதாக காவல் துறையினா், அதிகாரிகள் கூறினா். ஆனாலும் நடவடிக்கை இல்லை. எனவே, எங்கள் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
மாவட்ட ஏஐடியூசி குழுவினா் அளித்த மனு: மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஒவ்வொரு பேரூராட்சியிலும் ஒவ்வொரு விதமான ஊதியம் வழங்கப்படுகிறது. இவா்களுக்கு பணிப் பாதுகாப்பு இல்லை. மேலும், பணியிடத்தில் பல்வேறு குறைகள் உள்ளன. எனவே, இவா்களின் குறைகளைத் தீா்க்கும் வகையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்சியா் தலைமையில் குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.