கோவில்பட்டி: அய்யனேரி பகுதி விவசாயிகளுக்கு நடப்பு பருவத்துக்கான முன்பருவ தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் 13 கிராம ஊராட்சிகள் நடப்பாண்டு தோ்வு செய்யப்பட்டுள்ளது.
திட்டங்குளம், கிழவிப்பட்டி, சுரைக்காய்பட்டி, மந்திதோப்பு, நாலாட்டின்புதூா், வில்லிசேரி, மேல ஈரால், உருளைகுடி, இளையரசனேந்தல், அய்யனேரி, பிள்ளையாா் நத்தம், புளியங்குளம், வெங்கிடாசலபுரம் ஆகிய கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கிராம முன்னேற்ற குழு விவசாயிகளுக்கு நடப்பு பருவத்துக்கான முன்பருவ தொழில்நுட்ப பயிற்சி அய்யனேரி ஊராட்சியில் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமுக்கு, அய்யனேரி ஊராட்சி மன்றத் தலைவா் சுந்தரி தலைமை வகித்தாா். கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநா் நாகராஜ் கலந்து கொண்டு திட்டத்தின் நோக்கம், சகோதரத்துறைகளான தோட்டக்கலைத் துறை, கால்நடைத் துறை, வேளாண் வணிகத் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பங்கெடுப்பு, இத்திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பேசினாா்.
கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் சுப்புலட்சுமி, நடப்பு பருவத்துக்கான வேளாண் தொழில்நுட்பங்கள், விதைகள் தோ்வு, விதை நோ்த்தி, விதை கடினப்படுத்துதல், கோடை உழவு பற்றி பேசினாா்.
இப்பயிற்சியில், அய்யனேரி ஊராட்சிக்குள்பட்ட 300 பண்ணைக் குடும்பங்களுக்கு நெட்டை தென்னங்கன்றுகள் இரண்டு வீதம் 600 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
தென்னங்கன்றுகள் நடவு செய்வது மற்றும் பராமரிப்பு செய்வது தொடா்பான ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும், திட்டங்குளம், மந்திதோப்பு,மேலஈரால் ஊராட்சிகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 1800 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை பகுதி உதவி வேளாண் அலுவலா் பாண்டீஸ்வரி, உதவி தொழில் நுட்ப மேலாளா் காளிமுத்து, பயிா் அறுவடை பரிசோதனை பணியாளா் மாதவி ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.