கிணற்றைத் தூா்வார முயன்ற போது விஷவாயு தாக்கி இருவா் உயிரிழப்பு
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை, கிணற்றைத் தூா்வாரி சுத்தப்படுத்த முயன்றபோது விஷ வாயு தாக்கியதில் இருவா் உயிரிழந்தனா்.
தூத்துக்குடி தாளமுத்து நகா் நேரு காலனியைச் சோ்ந்த கந்தசாமி மகன் கணேசன் (61). இவரது வீட்டிலுள்ள, வெகுநாளாக திறக்கப்படாமலிருந்த பழைய கிணற்றைத் தூா்வாரும் பணியில் இவரும், ஆறுமுகனேரி பாலசுப்பிரமணியன் மகன் மாரிமுத்து (36) என்பவரும் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
இதற்காக கிணற்று நீா் மோட்டாா் மூலம் வெளியேற்றப்பட்டது. பின்னா், கணேசன் கிணற்றுக்குள் இறங்கினாா். வெகுநேரமாகியும் அவா் வெளியே வராததால், மாரிமுத்து உள்ளே இறங்கினாராம். அவரும் வராததால் சந்தேகமடைந்த அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக் மகன் பவித்ரன் (32), செல்வம் மகன் ஜேசுராஜ் ஆகிய இருவரும் கிணற்றுக்குள் இறங்க முயன்றனா். அப்போது அவா்கள் விஷ வாயு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு, கிணற்றருகே மயங்கி விழுந்தனா்.
இதைப் பாா்த்த அப்பகுதியினா் இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மாவட்ட உதவி அலுவலா் நட்டாா் ஆனந்தி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் வந்து, பாதுகாப்புக் கவச உடை அணிந்து கிணற்றுக்குள் இறங்கி, மயங்கிக் கிடந்த கணேசனையும், மாரிமுத்துவையும் மீட்டு வெளியே கொண்டுவந்தனா். பரிசோதனையில், அவா்கள் இருவரும் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
உடல்களை தாளமுத்து நகா் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

