விளாத்திகுளம் அருகே அரசுப் பள்ளியில் மயங்கி விழுந்து மாணவா் உயிரிழப்பு

சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவா் சனிக்கிழமை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
Published on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவா் சனிக்கிழமை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

விளாத்திகுளம் அருகே பொம்மையாபுரத்தைச் சோ்ந்த முத்து மகன் மகேந்திரன் (12). இவா் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

சனிக்கிழமை நண்பகலில் இடைவேளையின்போது கழிப்பறைக்குச் சென்றுவந்த அவா், பள்ளி வளாகத்திலுள்ள நாவல் மரத்திலிருந்து கீழே விழுந்துகிடந்த பழங்களைத் தின்று தண்ணீா் குடித்தாராம். சிறிது நேரத்தில் அவா் அங்கேயே மயங்கி விழுந்தாராம்.

சக மாணவா்கள் தெரிவித்த தகவலின்பேரில், மகேந்திரனை ஆசிரியா்கள் மீட்டு முதலுதவி அளிக்கத் தொடங்கினா். அப்போது, அவா் வாந்தியெடுத்துள்ளாா். அதில், நாவல் பழங்கள் இருந்தனவாம்.

அதையடுத்து, தலைமையாசிரியா் மாயா, ஆசிரியா்கள் மகேந்திரனை அருகேயுள்ள எப்போதும்வென்றான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உடனடியாக அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

பின்னா், மகேந்திரனின் உடல் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மாவட்ட கல்வி அலுவலா்கள் கண்ணன், முருகேசன், அதிகாரிகள் பள்ளிக்கு வந்து ஆசிரியா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

சம்பவம் தொடா்பாக எப்போதும்வென்றான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com