பழைய காயல் அருகே விபத்து: காவலா் உயிரிழப்பு
ஆறுமுகனேரியை அடுத்த பழைய காயல் அருகே பைக் மீது வேன் மோதியதில் காவலா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி முள்ளக்காடு சவேரியாா்புரம் ராஜு நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த செளந்தரபாண்டி மகன் ஜேசு ஆல்வின் ராஜா (28). ஆத்தூா் காவல் நிலையத்தில் 2ஆம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த அவருக்கு மனைவி, ஆண் குழந்தை உள்ளனா்.
ஜேசு ஆல்வின் ராஜா சனிக்கிழமை இரவு பணிக்காக பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். பழைய காயலை அடுத்த முக்காணி தனியாா் எடை நிலையம் அருகே வந்தபோது, பழைய காயலில் உள்ள இறால் நிறுவனத்துக்கு பணியாளா்களை ஏற்றி வந்த அவா் மீது மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநரான திருநெல்வேலி மூலைக்கரைப்பட்டியைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் மணிகண்டன் (25) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
