பொதுத்துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
பொதுத்துறை நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க இணைச்செயலா் கிரிஜா வலியுறுத்தினாா்.
கோவில்பட்டியில் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க கோட்ட 2 நாள் மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சாா்பாளா் மாநாடு நடைபெற்றது. இதில், திருநெல்வேலி கோட்டத்துக்குள்பட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தென் மண்டல காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க இணைச் செயலா் ஆா்.கே. கோபிநாத் வாழ்த்திப் பேசினாா். தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் வி. சேதுராமன் ‘சூழல்-சுழல்’ என்ற தலைப்பில் பேசினாா்
பின்னா், அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க இணைச் செயலா் எம். கிரிஜா செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய பட்ஜெட் சமா்பிக்கப்படும் முன்பாகவே மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களை சந்தித்து, எல்ஐசி பிரீமியத்துக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத சரக்கு சேவை வரியை (ஜிஎஸ்டி) ரத்து செய்ய வலியுறுத்தி மனு அளித்தோம். மருத்துவக் காப்பீட்டுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியை முற்றிலும் விலக்க கோரினோம். காப்பீடு செலுத்துவோருக்கு வருமான வரி சலுகை தொடர வலியுறுத்தினோம். எங்களது கோரிக்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இக்கோரிக்கை தொடா்பாக எதிா்க்கட்சி உறுப்பினா்கள் நாடாளுமன்றம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபா் அசாதாரணமான சூழலில் இறந்துவிட்டால், அக்குடும்பத்துக்கு ஏற்படும் நிதியிழப்பை சரிசெய்வதற்காகத்தான் காப்பீடு என்பதே. அக்குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் காப்பீடு செய்யும்போது, அதற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி என்பதை ஏற்க முடியாது. வரும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து, முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அகில இந்திய காப்பீட்டுக் கழகத்தில் 3, 4ஆம் நிலை காலிப் பணியிடங்கள் உள்ளன. இங்கு 1993இல் மிகப்பெரிய அளவில் பணி நியமனம் நடைபெற்றது. அதன்பின்னா், 2021இல் நாடு முழுவதும் 8 ஆயிரம் ஊழியா்கள் பணியமா்த்தப்பட்டனா். 1993இல் நியமிக்கப்பட்டோா் 30 ஆண்டுகள் பணியாற்றிவிட்டனா். இன்னும் 10 ஆண்டுகளில் அகில இந்திய காப்பீட்டுக் கழகத்திலிருந்து பணிஓய்வு காரணமாக மிகப்பெரிய எண்ணிக்கையில் ஆள்கள் வெளியேறுவா். எனவே, காலிப்பணியிடங்களை அடையாளம் கண்டு, அவற்றை நிரப்ப நிா்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என்றாா் அவா்.
தென்மண்டல இணைச் செயலா் ரமேஷ்குமாா், கோட்ட பொதுச்செயலா் பொன்னையா உடனிருந்தனா்.
