சென்னை-மதுரை தேஜஸ் விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சென்னை - மதுரை தேஜஸ் விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என, பாஜக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Published on

சென்னை - மதுரை தேஜஸ் விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என, பாஜக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, தூத்துக்குடிக்கு வந்த மத்திய இணை அமைச்சா் எல். முருகனிடம் தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: வணிக நகரமாகவும், வழிபாட்டுத் தலங்கள் அதிகமுள்ளதாகவும் விளங்கும் தூத்துக்குடி மாவட்டம், உப்பு உற்பத்தியில் சிறந்து விளங்குவதுடன், விவசாய முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் திகழ்கிறது.

மேலும், பிரதமா் மோடி தொடங்கிவைத்த குலசேகரப்பட்டினத்தில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம், வெளித் துறைமுக சரக்குப் பெட்டக முனையம், பசுமை ஹைட்ரஜன் வாயு உற்பத்தி நிலையம், சோலாா் மின் உற்பத்தி போன்ற பல புதிய திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தூத்துக்குடி மாவட்டத்துக்கு அதிகமானோா் வந்து செல்கின்றனா்.

எனவே, சென்னையிலிருந்து மதுரை வரை இயங்கும் தேஜஸ் விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு நோ்வழித் தடத்தில் புதிய ரயில் சேவை வேண்டும். தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு மணியாச்சி புறவழித் தடத்தில் செல்லும் வகையில் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

X
Dinamani
www.dinamani.com